திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக

 


தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆளுங்கட்சியான திமுக தலைமையில் ஒரு அணி, எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் மற்றொரு அணி, நடிகர் விஜய்யின் தவெக தலைமையில் இன்னொரு அணி, நாம் தமிழர் கட்சி தனித்து என தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவ இருக்கிறது.


கடந்த (2021) சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் இந்த முறையும் தொடர்கின்றன. கூடுதலாக, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளது. ஏற்கனவே, பெரும் படையுடன் தேர்தல் களம் கண்ட திமுக, இந்த முறை அதை மேலும் வலுப்படுத்தியுள்ளது.


இதுவரை சந்தித்த அத்தனை தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி இந்த முறையும் அதே முடிவை கையில் எடுத்துள்ளது. மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி குறித்து பேசிவரும் நிலையில், 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை திருச்சியில் நாளை மறுநாள் (21-ந் தேதி) நடைபெறும் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


ஆரம்பத்தில் திமுக கூட்டணியில் பேச்சு வார்த்தை நடத்திய தேமுதிகவுக்கு 6 தொகுதிகளும், 1 ராஜ்ய சபா சீட்டும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், அதன் பிறகு அதிமுக கூட்டணியிலும் தேமுதிக பேச்சு வார்த்தை நடத்தியதால்,திமுக தலைமை அதிருப்தி அடைந்தது.

அதனால், திமுக கூட்டணியா, அதிமுக கூட்டணியா என்று மதில்மேல் பூனையாக இருந்த தேமுதிக, கடைசியில் இன்று (வியாழக் கிழமை) திமுக கூட்டணியை உறுதி செய்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார்.


இதன்மூலம் 20 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தேமுதிக முதல்முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், நீண்ட நாள் அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.


இதேபோல், திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வந்த மற்றொரு கட்சியான பாமகவும் (டாக்டர் ராமதாஸ் அணி) அதிமுக கூட்டணியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. 'ஆட்சியில் பங்கு' என்று திமுக கூட்டணியில் நெருக்கடி கொடுத்து வரும் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு வருவதாக கூறிய திமுக தலைமையால், டாக்டர் ராமதாஸ் காக்க வைக்கப்பட்டார்.

ஆனால், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், திமுக கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் இணைவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில், டாக்டர் ராமதாஸ் அணியில் உள்ள சிலர் தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என்றும் யோசனை தெரிவித்து வந்தனர்.


இதை கச்சிதமாக பிடித்துக்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாசுக்கு கூட்டணி தூது விட்டுள்ளார். ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் பாமகவின் மற்றொரு அணியான டாக்டர் அன்புமணி ராமதாஸ் இருந்தாலும், வன்னியர்கள் வாக்கு சிதறக்கூடாது என்ற நோக்கத்தில் தந்தை - மகனை ஒரே அணிக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து காய்களை நகர்த்தினார்.அதற்கு வெற்றி கிடைத்ததாகவே தெரிகிறது. சமீபத்தில் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த டாக்டர் ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.வான அருள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அதிமுக கூட்டணியில் இணைய டாக்டர் ராமதாஸ் சம்மதம் தெரிவித்துவிட்டதாக அவர் கூறிவிட்டாராம்.


அதன் வெளிப்பாடாகவே, "தமிழ்நாட்டின் கடனை இரட்டிப்பாக்கியதே திராவிட மாடல் அரசின் சாதனை" என்று நேற்று டாக்டர் ராமதாஸ் திமுக அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார்.அதே நேரத்தில், தேர்தல் களத்தில் இன்னும் கூட்டணி கணக்கை தொடங்காத தவெகவுடனும் சில கட்சிகள் இணையும் என்று தெரிகிறது. ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, வரும் 24-ந் தேதி ஜெயலலிதா பிறந்த நாளில் புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறார். அவர் தவெக கூட்டணியில் இணைந்து 25 தொகுதிகளில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.


இதேபோல், எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் இன்று புதிய கட்சி தொடங்கும் பண்ருட்டி ராமச்சந்திரனும் தவெக கூட்டணியில் இணைவார் என்று தெரிகிறது. அதேபோல், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வமும் தவெக கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.


மொத்தத்தில், தமிழகத்தில் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவ இருப்பது உறுதியாகியுள்ளது.

Post a Comment

0 Comments