ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திருக்குறள் சார்ந்த கலை இலக்கிய அறிவுசார் போட்டிகளின் ஒரு பகுதியாக, திருக்குறள் கருத்தரங்கம் இரண்டாவது நாளாக, கல்லூரித் திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை அவர்கள் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். அவர் தமது உரையில், "
இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொன்னவர் வள்ளுவர். நீ வாழுகிற வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்க வேண்டும். கலங்கரை விளக்கமாக இருக்கக்கூடிய திருக்குறளை படைத்து அழியாப்புகழ் படைத்தவர் வள்ளுவப்பெருந்தகை.எச்சத்தால் காணப்பெறும் என்றுணர்த்தும் திருக்குறள் அக்குறளுக்கு சான்றாகவே திகழ்கின்றது" என்று சிறப்பித்தார்.
தமிழ்த்துறைத்தலைவரும்,திருக்குறள் அறிவுசார் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கா.காளிதாஸ் வாழ்த்துரை நல்கினார்.
முதல் அமர்வில் காரைக்குடி வள்ளுவர் பேரவையின் நிறுவனத்தலைவர் மெ.செயம்கொண்டான்,' பொதுமறைதான் நம் மறை' எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார் .அவர் தமது உரையில், " திருக்குறள் பற்றி பேச வேண்டும் என்றால் கரும்புத்தின்ன கூலியா வேண்டும் என்ற பழமொழியே முன்னிற்கும். திரு என்ற அடைமொழி பக்தி இலக்கியங்களுக்கு மட்டுமே உண்டு. ஆனால் திரு என்ற அடைமொழி பெற்ற ஒரே அற நூல் திருக்குறளேயாகும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புங்கள். நினைக்கிற நினைப்பு சரியாக இருக்க வேண்டும் என்று உலகிற்குப் பறைசாற்றியது திருக்குறள். கேட்க வேண்டும். கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். கேட்க கேட்க நம் அறிவும் ஆற்றலும் பெருகும் சிறக்கும் எனும் புது மறையைத் தந்தவர் வள்ளுவர்" என்றுரைத்தார்.
இரண்டாவது அமர்வில், அறந்தாங்கி கம்பன் கழகச் செயலாளர் அறந்தை வ.முத்துவேல், ' இன்றைய வாழ்வில் திருக்குறள் 'எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். அவர் தமது உரையில், " 1330 திருக்குறளில் அதிக திருக்குறள்கள் மாணவர்களுக்கானது. பணிவும் ஒழுக்கமும் மனிதனின் இரு பக்கங்கள். இதனையே வள்ளுவர் தம் குறட்பாக்களில் உறுதிபடுத்துகின்றார்.நெடிய காத்திருப்பு வெற்றிக்கான வாய்ப்பு.பாரத மாதாவை 50 ஆண்டுகள் வணங்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் இந்திய மக்களுக்கு அறிவுறுத்தினார்.அதிலிருந்து 50 ஆண்டுகள் கழித்து, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது.அதனால்தான் விவேகானந்தர் சுவாமி விவேகானந்தர் என்றழைக்கப்பெற்றார். அவர் பிறந்த தினத்தை நாம் இன்றும் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடுகின்றோம்.உலகில் உயர்ந்தது எதுவென்றால்,தாய்மை என்றே உலகம் சொல்லும்.அந்தத் தாய்மை தன் மகனை சான்றோன் எனக்கேட்கிறபொழுது பெரிதுவக்கும் என்கிறார் வள்ளுவர்" என்றுரைத்தார்.
மூன்றாவது அமர்வில், வேப்பந்தட்டை அரசு கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மா.மணிகண்டன், 'திரையிசைப்பாடல்களில் திருக்குறளின் தாக்கம்' எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். அவர் தமது உரையில், "நம் தமிழ்ச் சமூகம் தாய்வழிச்சமூகம். அகர முதல எனத் தொடங்கும் பத்துக்குறட்பாக்களில் கடவுள் வாழ்த்தைப்பாடுகின்றார் வள்ளுவர். நட்பாராய்தல் அதிகாரத்தில் நல்ல நட்பை உலகிற்கு உரைக்கின்றார் திருவள்ளுவர். திரையிசைப் பாடல்களில் திருக்குறள் பாக்களே அதிகம் பொதிந்துள்ளன. நிலவைப்பற்றி பாடாத கவிஞர்களே உலகில் இல்லை. இந்நிலவு குறித்தும் வள்ளுவர் கருத்தை முன் வைக்கிறார் " என்றுரைத்தார்.
நிறைவு அமர்வில் தமிழ்த்துறை விரிவுரையாளர் மு.பழனித்துரை, 'திருக்குறளில் உடைமைகள்' எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். அவர் தமது உரையில்," உலகின் ஒப்பற்ற நூலான திருக்குறள் அறத்தால் பொருளீட்டவும், அறத்தால் இன்பத்தை ஈட்டவும் சொல்கிற ஒரு புதுமையான நூல்.அன்புடைமை தொடங்கி நாணுடைமை ஈறாக , அறத்துப்பாலிலும், பொருட்பாலிலுமாக மொத்தம் பத்து அதிகாரங்களை வள்ளுவர் அகர வரிசையிலும் நிரல்படுத்தி இருக்கிறார். இவ்வாறு உடைமை என முடியும் அதிகார வைப்பு முறையை திருவள்ளுவர் இன்பத்துப்பாலில் வைக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாக உள்ளது.திருக்குறளைப் போலவே, நாலடியாரிலும் பொறையுடைமை மற்றும் அறிவுடைமை ஆகிய இரு அதிகாரங்களை மட்டும் சமண முனிவர்கள் வைத்துள்ளதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது" என்றுரைத்தார்.
முன்னதாக தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் மு.முரளி அனைவரையும் வரவேற்றார்.நிறைவாகத் தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் ச.கணேஷ்குமார் நன்றி கூறினார். பேராசிரியை ரா.ராஜலட்சுமி தொகுத்து வழங்கினார். கருத்தரங்கில் துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலரும் பங்கேற்றனர்.
கருத்தரங்க ஏற்பாடுகளை தமிழ்த்துறைப்பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் செய்திருந்தனர்.



0 Comments