தாமிரபரணியில் சிக்கி தவித்த இளைஞர்களை மீட்ட தீயணைப்புத்துறை

 


பாளையங்கோட்டை அருகே தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரு வாலிபர்களைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரைச் சேர்ந்த நண்பர்களான செல்வபெருமாள் (33) மற்றும் பரசுராமன் (33) ஆகிய இருவரும்,வெள்ளைக்கோவில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இன்று ஆற்றில் நீர்வரத்து வழக்கத்தை விட சற்று அதிகரித்திருந்ததை அறியாத அவர்கள், ஆழமான பகுதிக்குச் சென்றபோது திடீரென நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஆற்றில் தத்தளித்தவர்களின் அபயக்குரலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள், ஆற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த செல்வபெருமாள் மற்றும் பரசுராமன் ஆகிய இருவரையும் பத்திரமாக மீட்டனர். உடனடியாக அவர்கள் இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments