ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறையும் , தமிழ் வளர்ச்சித் துறையும் இணைந்து நடத்தும் திருக்குறள் சார்ந்த கலை இலக்கியப் போட்டிகளின் ஒருபகுதியாக, திருக்குறள் இருநாள் கருத்தரங்கின் முதல் நாள் கருத்தரங்கம், கல்லூரித் திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை அவர்கள் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். அவர் தமது தலைமையுரையில்," திருக்குறள் உலக மக்கள் அனைவருக்குமான ஒப்பற்ற இலக்கியம். திருக்குறளில் என்ன இல்லை என்பதைவிட , எல்லாப்பொருளும் இதன்பாலுள. சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதில், வள்ளுவர் வல்லவர். இளைஞர்கள் அனைவரும் திருக்குறளை தங்களின் வாழ்க்கைக்கான அடிப்படை அரிச்சுவடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். " என்றுரைத்தார்.
முன்னதாக கல்லூரி தமிழ்த்துறைத்தலைவரும், திருக்குறள் கலை இலக்கிய போட்டிகளின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கா. காளிதாஸ் அனைவரையும் வரவேற்றார்.
திருக்குறள் சார்ந்த இக்கருத்தரங்கில், முதல் அமர்வில்,பேராவூரணி திருக்குறள் பேரவைச் செயலாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் , 'திருக்குறள் வளர்க்கும் திறன்கள் ' எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.அவர் தமது உரையில், "திருக்குறள் என்பதற்கு மறு பெயர் திறன் என்றே சொல்ல வேண்டும். நான் வாழும் பேராவூரணி கஜா புயலினால் சிதைந்துபோனபோது,அங்குள்ள ஏரியை, இளைஞர்கள் ஒன்றுகூடி புணரமைத்தமைக்கு திருக்குறளே காரணமாகும்.காலம் கருதி இடத்தாற் செயின், ஞாலம் கருதினும் கைகூடும் என்ற நேர மேலாண்மைத்திறனை உலகிற்கு தந்தது திருக்குறள்,அண்ணல் காந்தியடிகளுக்கு திருக்குறளை அறிமுகப்படுத்தியவர் டால்ஸ்டாய் என்ற மேனாட்டறிஞர்.அண்ணல் காந்தியடிகளிடமிருந்து சுதந்திரம் வந்தது என்பது வரலாறு. அவர்படித்த திருக்குறளும் நமக்குச்சுதந்திரம் தந்தது என்று சொல்வது புது வரலாறு " என்றுரைத்தார்.
தொடர்ந்து இரண்டாவது அமர்வில், 'குறள் இனிது' எனும் தலைப்பில், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை, தமிழ் உயராய்வு மையத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் து.இரவிக்குமார் கருத்துரை வழங்கினார். அவர் தமது உரையில், "திருக்குறள் எங்களை ஈர்த்த பாடம். நன்றின்பால் உய்ப்பது அறிவு.சிக்கனமாகவே வாழ்ந்து காட்டியவர் திருவள்ளுவர். உலக மக்களின் அகவாழ்வியலின் கண்ணாடியாகப் பிரதிபலிப்பது திருக்குறள். மனத்தினால் தூய்மை உடையவனாக இருப்பதே வள்ளுவர் காட்டும் உண்மையான அறம்" என்றுரைத்தார்.
மூன்றாவது அமர்வில், கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் அ.சங்கர்தாஸ், 'திருக்குறளில் மனித நேயம்' எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். அவர் தமது உரையில்," ஒழுக்கமே உயிர்களுக்கு முதன்மையானது.பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் என்பது கலித்தொகை.மாணவர்களாகிய நீங்கள் எதையும் படியுங்கள் அல்லது படிக்காமல் போங்கள்.ஆனால் வாழ்க்கையில் திருக்குறளை மட்டும் படிக்காமல் இறந்து போகாதீர்கள்.மனிதர்களுக்கான தலையாயப் பண்பு மனித நேயம் என்பதை வள்ளுவர் உறுதிப்படுத்துகின்றார்" என்று வலியுறுத்தினார்.
நிறைவு அமர்வில், அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் ச.கணேஷ்குமார், " வெற்றிக்கு வித்தாகும் விடாமுயற்சி " எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். அவர் தமது உரையில், " முடியும் என நினைத்துப் போராடுவது விடாமுயற்சி. உலகம் வெற்றியாளர்களை மட்டுமே மனதில் வைக்கும்.விடாமுயற்சியே வெற்றிக்கான வித்து.ஊழையும் உப்பக்கம் எனும் குறளின் மூலம், விதியையையும் வெல்ல முடியும் என்று வலியுறுத்தியவர் நம் வள்ளுவர். துன்பத்துக்கு துன்பப்படாதவர் துன்பத்திற்கே துன்பம் செய்பவர், நீங்கள் அனைவரும் திருக்குறளின் வழி வாழ வேண்டும் " என்றுரைத்தார்.
நிறைவாகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் மு. பழனித்துரை நன்றி கூறினார். பேராசிரியை திருமதி ரா.ராஜலட்சுமி தொகுத்து வழங்கினார்.
கருத்தரங்கில் இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் ஏ. டேவிட்கலைமணிராஜ், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கு.சீனிவாசன், பேராசிரியர்கள் தி.சிவராஜன், உ.பூபதிராஜ், பொ.கார்த்திகேயன் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்க ஏற்பாடுகளை தமிழ்த்துறைப்பேராசிரியர்கள் முனைவர் சி.மேனகா, முனைவர் மு.முரளி, ந.வனிதா, மு.மோகனா, த.சுபா மற்றும் தமிழ்த்துறை மாணவ, மாணவியர் பலரும் செய்திருந்தனர்.



0 Comments