ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10,000 கருணைத் தொகை..... எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் வாக்குறுதி....

 



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது, “முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம் போல் உயர்ந்து மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு சொத்துவரி, வீட்டு வரி, மின்கட்டணம் மற்றும் குடிநீர் வரி எனப் பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் மக்களின் அன்றாடக் குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்:

குடும்பங்களுக்குக் கருணைத் தொகை: ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு உதவித்தொகை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000, 12-ஆம் வகுப்பு வரை படித்துப் பதிவு செய்துள்ளோருக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

மீனவர் நலன்: மீன்பிடித் தடைக்காலங்களில் மீனவர்களுக்கு தற்போது வழங்கப்படும் நிவாரணத் தொகை 8,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

பொங்கல் பரிசு: ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் திருநாளில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன், கூடுதலாக ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்: கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது இலவச மின்சாரம் 300 யூனிட் வழங்கப்படும் நிலையில் 450 யூனிட்டாக உயர்த்தப்படும்.

விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் தற்போது 1,000 யூனிட் வழங்கப்படும் நிலையில் 1,400 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.

கடன் தள்ளுபடி: நகர்ப்புறங்களில் நடைபாதை ஓரம் கடை வைத்துள்ள சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.”

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments