அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தாம் பயின்ற அரசு பள்ளிக்கு 3 புதிய வகுப்பறைகள் கட்டி திறந்து வைத்தார்



சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரளிக்கோட்டையில் தாம் பயின்ற அரசு பள்ளியின் வளர்ச்சிக்காக மேலும் ஒரு முக்கியப் பங்களிப்பை  கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்செய்துள்ளார்.

அரளிக்கோட்டையில் உள்ள அரசு பள்ளிக்காக, தமிழக அரசு சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.85 லட்சம் மதிப்பில் 4 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அதை தமிழக முதல்வர் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தாம் கிராம மக்களிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அமைச்சர் தனது சொந்த முயற்சியில் ரூ.30 லட்சம் செலவில் கூடுதலாக 3 புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை அமைத்து, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கியதுடன், தேர்வில் முதல் 4 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் வழங்கினார். மேலும், பள்ளிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிவில், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அமைச்சருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தாம் பயின்ற பள்ளிக்கே நேரடியாக பங்களித்து வளர்ச்சி கொண்டுவரும் இந்த செயல், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments