எனக்கு மிகவும் பசிக்கிறது.... உடல் சோர்வாக இருக்கிறது..... தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிபதி



 எனக்கு மிகவும் பசிக்கிறது… உடல் சோர்வாக இருக்கிறது… அதனால் தீர்ப்பை ஒத்திவைக்கிறேன் என்று அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளை நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அலகாபாத் உயர் நீதிமன்ற கிளையில் சந்திரலேகா சிங் என்பவர் கடன்கள் வசூல் தீர்ப்பாயம் பிறப்பித்த ஒரு உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்.  இந்த உத்தரவை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில்,  இவ்வழக்கை மீண்டும் விசாரித்து 6 மாத காலத்திற்குள் முடிக்க அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்தநிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற கிளையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.   நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி வழக்கை விசாரித்தார். 

அன்றைய தினம் நீதிபதி வித்யார்த்தி முன் விசாரணைக்கு 92 புதிய வழக்குகள் உட்பட 235 வழக்குகள் பட்டியலிடப்பட்டன, இதில், மாலை 4.15 மணி வரை 29 புதிய வழக்குகளை விசாரித்துள்ளார். 4.15 மணிக்கு சந்திரலேகா சிங் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் இரு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி  இந்த வழக்கை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு இன்றுடன்( அன்றைய தினம் – பிப்ரவரி 24) முடிவடைகிறது என்று தெரிவித்தனர். 

இதனால் நீதிபதி வித்யார்த்தி நீதிமன்ற நேரம் முடிந்த பின்னரும், 4.15 மணியளவில் சந்திரலேகா சிங் வழக்கை விசாரிக்கத் தொடங்கினார்.  விசாரணை இரவு 7.00 மணி வரை தொடர்ந்தது.வாதங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தீர்ப்பு வழங்கவில்லை. 

“இன்று 200க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்துள்ளேன். எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது.  சோர்வாகவும், தீர்ப்பை ஆணையிட உடல் ரீதியாக இயலாமையுடனும் இருக்கிறேன். அதனால் தீர்ப்பை ஒத்திவைக்கிறேன்” என திறந்தவெளி நீதிமன்றத்தில் கூறியுள்ளார். 

உத்தரவு நகலிலும் அவ்வாறே எழுதியுள்ளார். 

நீதிமன்றப் பதிவுகளில் ஒரு நீதிபதி தனது உடல்நிலை மற்றும் பசி குறித்து இவ்வளவு வெளிப்படையாகப் பதிவு செய்வது மிகவும் அரிதான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தற்போது அந்த உத்தரவு நகல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.



Post a Comment

0 Comments