தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாததால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. ஏப்ரல் 6-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். எனவே அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட ஆயத்தமாகி வருகிறார்கள்.இதற்கிடையே, சட்டசபை தேர்தலை சந்திக்க விஜய்யின் த.வெ.க. தீவிரமாகி உள்ளது. 234 தொகுதிகளிலும் த.வெ.க. தனித்து களம் காண்கிறது. இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்து வருகிறார். இதற்கான கூட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்து வருகிறது.
இதில், தமிழகத்தில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் 30 வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து வைத்து வருகிறார். முன்னதாக அவர் பேசுகையில், “4 முனைப்போட்டி, 40 முனைப்போட்டி என என்ன சொன்னாலும் இங்கே திமுக - தவெக இடையேதான் போட்டி உள்ளது. ஒரு முறை தயவு செய்து வாய்ப்பு கொடுங்கள். உங்கள நம்பி எல்லாத்தையும் விட்டுட்டு நான் எப்படி வந்தேனோ, அதே மாதிரி உங்களை நம்பி வேட்பாளர்களை ஒப்படைக்கிறேன். மே 4ம் தேதி அனைத்து தொகுகளிலும் நம் வேட்பாளர்கள் வெற்றி என்ற உலகச் சாதனைச் செய்தி வர வேண்டும்.
இது வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் மட்டுமல்ல, இது மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம். ஒரு எம்எல்ஏ என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றால் அனுபவத்தை வைத்து கொள்ளை அடிப்பவர்களாக இருக்கக்கூடாது. அனுபவத்தை வைத்துக்கொண்டு கேள்வி கேட்கும் நிருபரை அடிக்கும் எம்எல்ஏவாக இருக்கக்கூடாது. எம்எல்ஏ என்றால் அனுபவத்தை வைத்துக்கொண்டு கனிமவளங்களை கொள்ளை அடிப்பவர்களாக இருக்கக்கூடாது. எம்.எல்.ஏ என்பவர் எல்லை காப்பாளராக இருக்க வேண்டும். வேட்பாளர்களை நானே தேர்வு செய்துள்ளேன். களத்தில் மக்களோடு மக்களாக நிற்பவர்களையே வேட்பாளர்களாக தேர்ந்தெடுத்துள்ளேன்.
எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் நானே நிற்க முடியாது என்பதால் என் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளேன். ஒவ்வொரு வேட்பாளரையும் பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளேன், அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு. மக்கள் கூட்டணியான நமக்கும் ஸ்டாலின் கூட்டணிக்கு மட்டும்தான் போட்டி,
உங்கள் குரல் கேட்டால் ஓடிவருவது மட்டுமல்ல, நீங்கள் குரல் கொடுப்பதற்கு முன்பே வரும் ஒருவரை தான் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஊழலில் ஊறிப்போனவர்களுக்கு ஊழலுக்கு எதிரானவர்களுக்குமான தேர்தல். உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்தது போல கிழிந்த துணியை தைத்தது போன்ற ஒட்டுப்போட்ட கூட்டணி தி.மு.க. கூட்டணி.
(வேட்பாளர்காளக தேர்வு செய்தவர்களை உறுதி மொழி ஏற்க வைத்தார்)
மக்கள் பணத்தை எடுக்க மாட்டேன், பெண்கள் பாதுகாப்பை உறுதி படுத்துவேன், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன். ஊழல் கறை படியவிடமாட்டேன், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன். மக்கள் பணத்தை சுரண்ட மாட்டேன் என்று இன்று வேட்பாளர்கள் கொடுத்தது உறுதி மொழி அல்ல, உத்தரவாதம்” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார்.
இது தேர்தல் வாக்குறுதி அல்ல.. உத்தரவாதம்.
போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு: போதைப்பொருளை தடுக்க கடும் சட்டங்கள் கொண்டுவரப்படும். போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க சமூக காவலர்கள் திட்டம். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு மன்றம் அமைக்கப்படும். போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்போம்.
கல்வி உத்தரவாத திட்டம்: கல்விக்கு வறுமை தடையாக இருக்கக் கூடாது. 12-ம் வகுப்புக்கு பிறகு பி.ஹெச்.டி வரை மாணவர்களுக்கு 20 லட்சம் வரை பிணையில்லா கல்வி கடன் வழங்கப்படும்.
TRATA வாயிலாக அனைத்து மாநில அரசுப் பணிகளுக்கும் ஒரு நிலையான ஆட்சேர்ப்பு அட்டவணை வெளியிடப்படும். 29 வயதுக்கும் மேல் வேலைவாய்ப்பு இல்லாத டிகிரி முடித்த இளைஞர்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும், பாலிடெக்னிக் முடித்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாயும் இளைஞர் நல நிதியாக வழங்கப்படும்.
ஆண்டுதோறும் 5 லட்சம் இண்டர்ன்ஷிப் பணிகளை வழங்க அரசு, தனியார் தொழில் நிறுவனங்கள் கூட்டாக இயங்கும். இதில் பட்டதாரிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாயும் ஐ.டி படித்தவர்களுக்கு 8 ஆயிரம் ரூபாய் சம்பளமாக அரசே வழங்கும்.
நேர்மையான தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் 25 லட்ச ரூபாய் அளவுக்கு பிணையில்லா கடன் வழங்கப்படும்.
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பை உறுதி செய்யும் திட்டம்: தமிழகத்தில் வேலைவாய்ப்பில் நம் இளைஞர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். தனியார் நிறுவனங்களில் 75 சதவீத தமிழர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு மாநில ஜி.எஸ்.டியிம் 2.5 சதவீத மானியம் வழங்கப்படும். மின் கட்டணங்களில் 5 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் முதல்வர் மக்கள் சேவை நண்பர் திட்டம் தொடங்கப்படும். இதன்மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும். தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக் குழு அமைக்கப்படும். இளைஞர்கள் தங்களின் கருத்துகளை இதில் தெரிவிக்கலாம்.
தமிழ்நாட்டின் பாரம்பரியம் கலாசாரத்தை உலகளவில் பரப்ப நவீன படைப்பாளி பள்ளிகள் அமைக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பாளர் அறிமுகம் செய்தநிலையில், நாளை (30-ந்தேதி) ஒரே நாளில் த.வெ.க. வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே சென்னையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய் நாளை (திங்கட்கிழமை) தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments