தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம், காந்திநகர் - அனுமார் கோவில் மெயின் ரோடு பகுதியில் வசித்து வரும் ஆண்டாள் என்பவரின் குடும்பத்தினர், தங்களின் வாழ்வாதாரத்தை காக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
பெரியகுளம் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில், ஆண்டாள் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அன்றாடக் கூலி வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு, சிறு குழந்தைகளுடன் அந்த இடத்திலேயே தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான அந்த இடத்தை சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதாகவும், அரசு இடத்திற்குப் பட்டா பெற்றுவிட்டதாகக் கூறி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால், பல தசாப்தங்களாக அங்கு வசித்து வரும் ஆண்டாள் குடும்பத்தினர் வீதிக்கு வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆண்டாள் கூறுகையில், "எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தலையிட்டு, எங்களுக்கு அந்த இடத்திலேயே வாழ்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அதற்குரிய மாதவாடகையைச் செலுத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படும் எங்களை அப்புறப்படுத்தாமல், மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
வாழ்வாதாரத்தை இழந்து வாடும் இக்குடும்பத்தின் கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




0 Comments