நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் வலிவலம் கிராமத்தில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் கோவிலின் 68ஆம் ஆண்டு பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 22ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூச்சொரிதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி திருக்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தெடுகளை சுமந்து ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேலும், ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என மும்மதத்தினரும் கோவில் உபய ஏற்பாடுகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இவ்வாண்டு சாமி புறப்பாடு மற்றும் புஷ்ப உபயத்தை இஸ்லாமியர் ஒருவர் செய்திருப்பது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

0 Comments