திருக்குவளை வட்டம் வலிவலம் கிராமத்தில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் கோயிலின் 68ஆம் ஆண்டு பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 22ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூச்சொரிதல் நிகழ்ச்சி மார்ச்.26 ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சக்தி கரகம் எடுத்தல் மற்றும் ரதக்காவடி ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அம்மன் வீதியுலா காட்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தப்பாட்ட குழுவினரின் நடன நிகழ்ச்சியோடு முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. வீட்டுகள் தோறும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேலும், ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என மும்மதத்தினரும் கோவில் உபய ஏற்பாடுகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இவ்வாண்டு சாமி புறப்பாடு மற்றும் புஷ்ப உபயத்தை இஸ்லாமியர் ஒருவர் செய்திருப்பது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. வலிவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முரளி மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் .
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்






0 Comments