ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கல்லூரியில் வருடா வருடம் நடைபெறும் இந்நிகழ்ச்சி அன்பு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அனைத்து மதத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் 500 க்கும் மேற்பட்டார் இதில் கலந்து கொண்டனர்.கல்லூரியின் தலைவர் அகமதுயாசின் இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் ராமர் முன்னிலை வகித்தார்.
துணை முதல்வர் திருவேணி உட்பட கல்லூரி பேராசியர்கள் மற்றும் பேராசிரியைகள் இதில் கலந்து கொண்டனர். மேலும் இந்த இப்தார் நிகழ்ச்சி என்பது வெறும் உணவருந்தும் நேரம் மட்டுமல்ல, அது இறைவனுக்கு நன்றி செலுத்துதல் மற்றும் ஆன்மீக ரீதியில் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் அற்புத நேரம் என்பது குறித்து வலியுறுத்தப்பட்டது.
இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, நாள் முழுவதும் உணவின்றி, பசி மற்றும் தாகத்தைக் கட்டுப்படுத்திய நோன்பாளிகளுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியான நேரமாகவும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் மாபெரும் நிகழ்வாகவும் இப்தார் போற்றப்படுகிறது. இப்தார் விருந்தில் இடம் பெறும் முக்கிய உணவுகளான பேரீச்சம்பழம், நோன்பு கஞ்சி, வடை, பழச்சாறுகள், ஸ்நாக்ஸ் மற்றும் பிரியாணி ஆகியன நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிமாறப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியை ரஞ்சிதம் மற்றும் மாணவர் மன்ற ஆலோசகர் செய்திருந்தனர்.

0 Comments