அடுத்தடுத்து தாக்கப்பட்ட திரிணாமுல் எம்பிக்கள்..... மண்டைகள் உடைப்பு..... பரபரப்பான மேற்கு வங்கம்

 


மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக (BJP) ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (TMC) மூத்த எம்.பி.க்கள் அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி ஆகியோர் அடுத்தடுத்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வென்று அம்மாநில முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.முன்னாள் முதல்வரான மமதா பானர்ஜியின் உறவினரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி, தேர்தலில் கொல்லப்பட்ட அவரது கட்சித் தொண்டர் சஞ்சு கர்மகாரின் குடும்பத்தினரைச் சந்திக்க தெற்கு 24 பர்கானா மாவட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டு, “திருடன், திருடன்” (Chor Chor) என முழக்கமிட்டு, அவர் மீது கற்கள், முட்டைகள், காலணிகள் மற்றும் செங்கற்களை வீசித் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலின் போது அவரது சட்டை கிழிக்கப்பட்டது, கண்ணாடி உடைந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் அவருக்கு ஹெல்மெட் அணிவித்து பத்திரமாக மீட்டனர்.இதேபோல இன்று மே 31-ந் தேதி மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹூக்ளி மாவட்டத்தின் சண்டிதலாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி.யான கல்யாண் பானர்ஜி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக காவல் நிலையத்தில் மனு அளிக்கச் சென்றபோது, பாஜகவினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அப்போது கூட்ட நெரிசலில் கல்யாண் பானர்ஜி மீது கல் வீசப்பட்டதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. சாலையில் விழுந்த அவரை சிஆர்பிஎப் வீரர் ஒருவர் மீட்டார்.

பாஜகவினர் திட்டமிட்டே இத்தாக்குதல்களை நடத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஆனால் பாஜகவோ, சட்டசபை தேர்தலுக்கு முன்னர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் இன்றைய முதல்வர் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கொடூரமாக தாக்கப்பட்டனர். தற்போது மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர் என மறுப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments