ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் சர்வேயர் சத்யராஜ் ஒரு நிலத்தின் உட்பிரிவு பட்டா நிலத்தை அளந்து அதன் அளவீட்டு விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து தருவதற்காக ரூ.5,000/- லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் வந்தது.இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை, இராமநாதபுரம் பிரிவினர் 13.07.2026 அன்று பொறிவைத்து பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து புகார்தாரரிடம் ரூ.5,000/- லஞ்சப் பணத்தை சர்வேயர் திரு. சத்யராஜ் கைகளில் பெற்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். அவரிடமிருந்து லஞ்சப் பணம் மீட்கப்பட்டது.
புகார்தாரர் தனது பெயரை வெளியிட விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.இதனையடுத்து சர்வேயர் சத்யராஜ் கைது செய்யப்பட்டார்.அரசு அலுவலகங்களில் ஏதேனும் லஞ்சம் கோருதல், லஞ்சம் பெறுதல் அல்லது பிற ஊழல் தொடர்பான செயல்பாடுகள் குறித்து தகவல் அறிந்தால், இராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது 94982 15697, 94986 52166, 94986 52167, 94986 52169 ஆகிய கைபேசி எண்களிலோ, 04567-230036 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் மற்றும் புகார்கள் உரிய ரகசியத்துடன் கையாளப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

0 Comments