கீழக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை நேரங்களில் டாட்டா ஏசி வாகனத்தில் வீடுகளில் கட்டி போட்டிருக்கும் ஆடுகளை திருடி வந்த கணவன் மனைவி உட்பட நான்கு பேர் கொண்ட ஆடு திருடும் கும்பலை பரமக்குடி ஆட்டுச் சந்தையில் வைத்து ஆட்டின் உரிமையாளர்கள் பிடித்து கீழக்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து 60க்கும் மேற்பட்ட ஆடுகள் மீட்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி, கீழக்கரை கும்பிடு மதுரை, மோர்குளம் . ஆழ்வார் கூட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதிகளில் அடிக்கடி வீட்டில் வளர்க்கும் ஆடுகள் அதிகளவு திருடு போனது. காணமல் போன ஆடுகளை கண்டுபிடித்து தருமாறு ஆட்டின் உரிமையாளர்கள் கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர்.
புகாரை பெற்றுக் கொண்ட கீழக்கரை காவல்துறையினர் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஆட்டு சந்தைக்கு சென்று தங்களுடைய ஆடுகள் ஏதும் விற்பனைக்கு வந்து உள்ளதா என சோதனை செய்யுமாறு அறிவுறுத்தி இருந்தனர் அதன் அடிப்படையில் மோர் குளத்தைச் சேர்ந்த ஜமாலுதீன், மஸ்தான் சாகிப், அப்துல் மாலிக் மூவரும் தங்களது வீட்டில் காணாமல் போன ஆடுகளை தேடி பரமக்குடி ஆட்டு சந்தைக்கு சென்று அங்கு விற்பனைக்கு நிறுத்தப்பட்டிருந்த ஆடுகளை சோதனை செய்தனர். அப்போது ஜமாலுதீன் வளர்த்து வந்த ஆட்டின் அடையாளங்களுடன் ஆடு ஒன்று விற்பனைக்காக நின்றதை கண்ட ஜமாலுதீன் ஆடு விற்பனையாளரிடம் சென்று ஆடு குறித்து கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த ஜமாலுதீன் கீழக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார் அவருடைய தகவலின் பெயரில் பரமக்குடி ஆட்டுச் சந்தைக்குச் விரைந்து சென்ற கீழக்கரை போலீசார் சந்தேகத்தின் பேரில் திருட்டு ஆடுகளை விற்பனை செய்து வந்த கீழவலசை பகுதியைச் சேர்ந்த செல்வம் (38) அவரது மனைவி பவித்ரா (35) லட்சுமிபுரம் ராமநாதன் (33) கீழக்கரை பகுதியை சேர்ந்த தமிழரசன் (20) ஆகிய நான்கு பேரையும் பிடித்து கீழக்கரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.விசாரணையில் அதிகாலை 2 மணி அளவில் மக்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும் போது டாட்டா ஏசி சரக்கு வாகனத்தில் வந்து வீடுகளில் கட்டி போட்டு இருக்கும் ஆடுகளை திருடி செல்வதை ஒப்புக்கொண்டனர்.
நேற்று பரமக்குடி ஆட்டுச் சந்தையில் மோர் குளம் பகுதியில் திருடப்பட்ட நான்கு ஆடுகள் கொண்டு வந்ததாகவும் மேலும் திருடப்பட்ட ஆடுகள் ராமநாதபுரம், காஞ்சிரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில் கீழக்கரை போலீசார் ராமநாதபுரத்தில் 11 ஆடுகளும் காஞ்சிரங்குடியில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் என கீழக்கரை சுற்றுவட்டார பகுதியில் ஆங்காங்கே ஆடு திருடும் கும்பல் பதுக்கி வைத்திருந்த 62 ஆடுகள் 13 குட்டி ஆடுகள் என மொத்தம் 74 ஆடுகள் மீட்டு கீழக்கரை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.
ஆடுகள் மீட்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த ஆட்டை பறிகொடுத்த உரிமையாளர்கள் கீழக்கரை காவல் நிலையத்தில் குவிந்தனர். பின்னர் காணமல் போன ஆடுகளின் அடையாளத்தை காட்டி சம்பந்தப்பட்ட ஆட்டின் உரிமையாளர்களிடம் ஆட்டை ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் கீழக்கரை சார்பு ஆய்வாளர் கார்த்திக் மற்றும் கலை மன்னன் . தினேஷ் சங்கிலி மற்றும் காவல்துறையினர். ஈடுபட்டு வருகின்றனர்.
ஆடு திருடியதாக பிடிபட்ட தமிழரசன், ராமநாதன், பவித்ரா செல்வம் ஆகிய நால்வர் மீதும் கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


0 Comments