திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேரில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21ஆம் தேதி அமோனியா வாயு கசிந்து 83 தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்தனர். இவர்களில் அடுத்தடுத்து 13பேர் உயிரிழந்த நிலையில், வேல்ஸ், வெங்கடேஸ்வரா, ஸ்டான்லி, ராஜீவ்காந்தி என 4 மருத்துவமனைகளில் 66 வட மாநிலத் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். எஞ்சிய மீட்கப்பட்ட தொழிலாளர்கள் பெரியபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மீட்கப்பட்ட வட மாநில தொழிலாளர்களில் ஒடிசாவை சேர்ந்த 59 தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். 32 பெண்கள், 27 ஆண்கள் என மொத்தம் 59 தொழிலாளர்கள் 2 அரசு பேருந்துகளில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசா மாநில அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டு காலை 10 மணிக்கு புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக திருவள்ளூர் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். எஞ்சிய பிற மாநில தொழிலாளர்கள் அவர்களது மாநில அதிகாரிகளுடன் ஆலோசித்து அடுத்தடுத்து அவர்களது மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.



0 Comments