ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாப்பணம் கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் கடந்த மூன்று தலை முறையாகக் கதவுகளே கிடையாது.மீறிக் கதவுகளுடன் வீடு கட்டப்பட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்குச் சாமி குத்தம் ஏற்பட்டு விடுமாம்.இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த முத்துமாரி என்பவர் கதவு வைத்து வீடு கட்டினாராம்; அவருடைய மாடுகள் இரண்டும் இறந்து போய்விட்டனவாம். அது சாமி குத்தத்தால் வந்த கேடு என்று, அவ்வூர் மக்கள் இன்றும் நம்புகின்றார்கள். அதனால் கதவுகள் இல்லாமலேயே புதிய வீடுகளைக் கட்டுகிறார்கள்.
வெளியூர் போக வேண்டுமானால் வாசலுக்கு மேலேயுள்ள சிறு சன்னலில் நூலைக் கட்டி அதில் சேலைத் துணியை மறைப்பாகத் தொங்க விடுவார்கள். அது காற்றில் பறக்காமல் இருக்க, வரிசையாக நாலைந்து செங்கற்களைத் தூக்கி வைத்துவிட்டுப் போய் விடுவார்கள். நாய், கோழி போன்றவை எதுவும் உள்ளே போகாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு.
இந்த ஊர்வாசியான மொட்டையன் என்பவர் 1952இல் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் மண் சுவர், கீற்றுக் குடிசை அதன்பின் பனை ஓலைக் குடிசையாக மாறிப் பின்னர் ஓட்டுவீடாக மாற்றம் வந்ததாம்.
பகல் நேரத்திலும் சரி இரவு நேரத்திலும் சரி பாப்பணம் கிராமத்தில் இதுவரை எந்தவொரு பொருளும் களவு போனது இல்லையாம் – என்ன ஒரு நேர்மை!ஊர் எல்லையில் காவல் தெய்வமான முனியப்பசாமிக்கு ஒரு கோவிலும் கட்டியிருக்கிறார்கள். அந்தக் கோவிலிலும் வாசலோ நிலையோ கதவோ ஏதும் கிடையாது.
அந்த முனியசாமிதான் ஊரில் களவு போகாமல் பாதுகாக்கும் காவல் தெய்வம். இரண்டு ஏக்கர் பரப்பளவில் சுற்றுச் சுவருடன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் அத்தனை வாசல்களும் கதவுகளின்றித் திறந்தே இருக்கிறது – என்ன ஒரு பக்தி? பொதுவாக நமது கிராம மக்களின் பக்தி நம்மை வியப்பிற்குள் ஆழ்த்தி விடும்.இன்றளவும் உண்மை.

0 Comments