சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறை மற்றும் துவார பாலகர் சிலைகளில் இருந்த தங்க தகடுகள் கடந்த 2019-ம் ஆண்டு புனரமைப்பு பணிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சுமார் 4.5 கிலோ தங்கம் அபகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டு உத்தரவின்படி சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தினர்.இதையடுத்து தங்கம் அபகரிப்பு தொடர்பாக முக்கிய குற்றவாளியான உன்னி கிருஷ்ணன் போற்றி, முராரிபாபு (வயது54) கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் கடந்த பிறகும் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முராரி பாபு சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை கோவில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். இவர் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பிறகு வாரத்திற்கு ஒரு முறை சிறப்பு விசாரணை குழு முன்பாக நேரில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தார்.
இதனிடையே அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலையில் மரணம் அடைந்தார்.
அவரது உடல் நேற்று மாலையில் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. இவர் கேரள போலீஸ் துறையில் பணியாற்றி வந்த நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தில் நியமனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

0 Comments