தேனி: கள்ளர் சீரமைப்பு உண்டு உறைவிடப் பள்ளி, கள்ளர் மாணவர் விடுதி மற்றும் சமூகநீதி விடுதியினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு



தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் வெள்ளையம்மாள்புரத்தில் செயல்பட்டுவரும் கள்ளர் சீரமைப்பு உண்டு உறைவிடப்பள்ளி, அரசு கள்ளர் மாணவர் விடுதி மற்றும்  ஓடைப்பட்டியில் உள்ள சமூகநீதி மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன்  மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்   நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின்போது, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்  விடுதியில் தங்குமிட வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதி, சுகாதார வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கு அட்டவணைப்படி வழங்கப்பட்டு வரும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  அதனைத் தொடர்ந்து அமைச்சர் , விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடி மாணவர்களின் தேவைகள்   குறித்து கேட்டறிந்து, மாணவர்கள் ஆரோக்கியமான பழக்கங்களை கற்றுக்கொண்டு, தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். 



பின்னர், விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து உணவருந்திபார்த்து, ஆய்வு மேற்கொண்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்,அலுவலர்கள் மற்றும் மாணவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தெரிவிக்கையில், 

மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் விடுதிகளில் செய்து தரப்படும். மேலும்,  மாணவர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகள்,  பேருந்து வசதி மற்றும் கள்ளர் சீரமைப்புத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்  தெரிவித்தார். 



இவ்வாய்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரஜத் பீடன்,  இணை இயக்குநர் (கள்ளர்  சீரமைப்பு) சுபாஷினி,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார்,  உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராஹிம், வட்டாட்சியர் (உத்தமபாளையம்) பாலசண்முகம் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments