நாகை அருகே மண்வாசனை மாறாத பாரம்பரியம்….. விடிய விடிய ரசிகர்களை கவர்ந்த சத்திய அரிச்சந்திரா நாடகம்.....



நாகை மாவட்டம் திருக்குவளை அருகே கோயில்கன்றாப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ நடுதறிநாத சுவாமி திருக்கோவில், ஆண்டுதோறும் நடைபெறும் சீதாளப்பிகை மாரியம்மன் வசந்த உற்சவத்தால் பக்தி மற்றும் பாரம்பரியத்தின் சங்கமமாக மாறியுள்ளது.

இந்த ஆண்டும் வழக்கம்போல், திருவிழாவை முன்னிட்டு தொன்றுதொட்டு தொடரும் பாரம்பரிய நாடகங்கள் உற்சாகமாக அரங்கேற்றப்பட்டன. “ஸ்ரீ வள்ளி திருமணம்”, “சத்தியவான் – சாவித்திரி” போன்ற புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள், கிராம மக்கள் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து வந்த ரசிகர்களையும் ஈர்த்தன.



இதில் விழாவின் உச்சக்கட்ட நிகழ்வாக, மூன்றாம் நாள் நடைபெற்ற “சத்திய அரிச்சந்திரா” நாடகம், பாரம்பரிய மண்வாசனையை மாறாமல் கொண்டு வந்து, மிக விமர்சையாக அரங்கேற்றப்பட்டது. உண்மை, தர்மம் மற்றும் தியாகத்தின் சிகரமாக விளங்கும் இந்தக் கதையை, கலைஞர்கள் தங்களின் உன்னதமான நடிப்பால் உயிரோட்டமாக்கினர்.நாடகம் தொடங்கிய தருணத்திலிருந்து விடியற்காலை வரை, பக்தர்களும் ரசிகர்களும் கண்ணசராமல் அமர்ந்து ரசித்த காட்சி, அந்தக் கிராமத்தின் கலாச்சார உயிரோட்டத்தை வெளிப்படுத்தியது.

இளம் தலைமுறையினருக்கும் பாரம்பரிய நாடகக் கலையை அறிமுகப்படுத்தும் நோக்கில் இவ்வகை நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மறைந்து வரும் நாடகக் கலைக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக, இத்தகைய கிராம விழாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.



மேலும், திருவிழா நடைபெறும் நாட்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடைவிடாத அன்னதானம் வழங்கப்பட்டு, சேவை உணர்வு மற்றும் பக்தி ஒருங்கிணைந்த நிகழ்வாக விழா அமைந்தது.கிராமங்கள் தோறும் இப்படியான நாடகங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டால், இந்த தலைமுறையும் நம் பாரம்பரியத்தை அறிந்து காக்கும் என்ற நம்பிக்கையை இந்த விழா மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

பக்தி, பாரம்பரியம், கலை  இந்த மூன்றின் அழகியy சங்கமமாக கோயில்கன்றாப்பூர் கிராமம் இன்று திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments