புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கரூர் அருகே களபம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புரமணி (50) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியூருக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டின் ஜன்னல் கதவு அறுக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.அதோடு, வீட்டின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உடனடியாக கரூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஒரு வார காலம் ஆகியும் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை என குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.திருடப்பட்ட இருசக்கர வாகனமே குடும்பத்தின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்ததாகவும், அதன்மூலம் தான் அன்றாட வேலைகளுக்கும் குடும்ப தேவைகளுக்கும் சென்று வந்ததாகவும் சுப்புரமணி தெரிவித்துள்ளார்.
எனவே, சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை விரைவில் கைது செய்து, திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை மீட்டுத் தர வேண்டும் என குடும்பத்தினரும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.களபம் கிராமத்தில் நடைபெற்ற இந்த திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



0 Comments