ராமநாதபுரத்தில் பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து வாகனம் மோதி விபத்து



இராமநாதபுரம் அருகே டயர் வெடித்து சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது மற்றொரு லாரியும், காரும் மோதியதில் இருவர் காயமடைந்தனர். துாத்துக்குடியில் இருந்து திருவாரூருக்கு சோப்பு தயாரிக்க பயன் படுத்தும் சோடா ஏற்றிக்கொண்டு இரு லாரிகள் சென்றன. 

அதிகாலை இராமநாதபுரம் அருகே பாப்பாக்குடி விலக்கு புறவழிச்சாலையில் சென்றபோது செந்தில் ஆறுமுகம் 40, ஓட்டிவந்த லாரியின் டயர் வெடித்தது. இதனால் மற்றொரு லாரியை ஓட்டி வந்த பாலமுருகன் 42, உதவி செய்தார். இரு லாரிகளையும் ரோட்டோரம் நிறுத்தி டயரை மாற்றிக் கொண்டிருந்தனர். 

அப்போது நாகப்பட்டினத்தில் இருந்து துாத்துக்குடிக்கு நிலக்கரி ஏற்றி சென்ற டிப்பர் லாரி, பழுதாகி நின்ற லாரி மீது மோதியது. இதில் டிப்பர் லாரி டிரைவர் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் 41, காயமடைந்தார்.இராமநாதபுரம் பஜார் போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கமுதியில் இருந்து இராமேஸ்வரம் நோக்கி சென்ற கார், நிலக்கரி ஏற்றி வந்த லாரி மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. காரை ஓட்டி வந்த கமுதியை சேர்ந்த காளிராஜ் 28, காயமடைந்தார். இரு டிரைவர்களும் இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments