மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் அடங்கிய குழு தென்னிந்தியாவில் முகாமிட்டு தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர். சாமர்த்தியமாக கைவரிசை காட்டும் இந்த பெண்களுக்கு 'த்ரீ ரோஸ்' திருட்டு கும்பல் என்று போலீசார் பெயர் வைத்தனர்.
ஆந்திரா, தமிழகத்தில் அந்த கும்பல் அதிக அளவில் கைவரிசை காட்டி வந்தனர். மேலும் போலீசில் சிக்காமல் இருக்க அடிக்கடி இடத்தை மாற்றி வந்தனர். இந்த நிலையில் சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள 2 துணிக்கடைகளில் அந்த கும்பல் கைவரிசை காட்டி தப்பியது. இது தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் 3 பெண்களின் புகைப்படத்தை வெளியிட்டு அவர்களை வலை வீசி தேடி வந்தனர்.இந்த நிலையில் தேடப்பட்டு வந்த 3 பெண்களும் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் 3 பேரையும் கையும், களவுமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் சாதாரண உடையில் அந்த ஜவுளி கடைக்குள் நுழைந்தனர்.
அப்போது அங்கு ஜவுளி வாங்க வந்திருந்த பெண்களை நோட்டமிட்டு நகை திருட திட்டமிட்டுக்கொண்டு இருந்தனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.தொடர்ந்து பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த குஷ்பு (வயது 40), மீனாட்சி (35), லட்சுமி (40) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் சென்னையில் முகாமிட்டு தமிழகம், ஆந்திராவில் பல்வேறு இடங்களில் திருடியது தெரியவந்தது. மேலும் திருடிய பொருட்களை அவ்வப்போது ரெயில் மூலம் மத்திய பிரதேசம் சென்று அங்கு பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து 3 பெண்களையும் சென்னை மாம்பலம் போலீசாரிடம் புதுவை போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் 3 பேரையும் சென்னைக்கு அழைத்து சென்றனர்.

0 Comments