ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லியம்மன் கோயிலின் 50-ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி நடைபெற்ற திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
விழாவை முன்னிட்டு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். மேலும், அழகு குத்தி, பறவை காவடி சுமந்தும், குண்டம் இறங்கியும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிழாவில் முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களின் பக்தி முழக்கங்களால் கோயில் வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
விழாவையொட்டி கோயில் வளாகம் மற்றும் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு பொதுஅன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்றனர்.
திருவிழாவின் போது பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளை காவல்துறையினர் சிறப்பாக மேற்கொண்டனர். அதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும் முகாமிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்டனர்.திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

0 Comments