தஞ்சாவூரிலிருந்து நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், சமீப காலமாக அதன் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறிப்பாக, திருக்குவளை, கீழையூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல பகுதியில் உள்ள ஆவின் டீலர்களுக்கு தினசரி வரக்கூடிய பால் அளவு தொடர்ந்து குறைந்து வருவதால், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.பொதுமக்கள் முன்பதிவு செய்யும் ஆர்டரை விட குறைவான அளவிலேயே பால் வழங்கப்படுவதால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மற்ற பால் வகைகளுடன் ஒப்பிடும்போது குறைந்த விலையிலும், உயர்ந்த தரத்திலும் கிடைக்கும் ஆவின் பாலை பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். ஆனால், தற்போதைய தட்டுப்பாடு காரணமாக அதனை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், அதிகாலை விற்பனைக்காக கொண்டுவரப்படும் குறைந்த அளவிலான பால், 30 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்து விடுவதால், பின்னர் வரும் வாடிக்கையாளர்கள் பால் இல்லாமல் திரும்ப வேண்டிய நிலை தொடர்கிறது.
கடந்த ஒரு மாதமாக இந்த தட்டுப்பாடு கடுமையாக இருந்து வருவதாகவும், உடனடி நடவடிக்கை எடுத்து பால் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்



0 Comments