திருக்குவளை அருகே 30 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படும் மீனம்பநல்லூர் சிவன் கோயில் தெரு குளம்

 


நாகை மாவட்டம் மீனம்பநல்லூர் ஊராட்சி சிவன் கோயில் தெரு பகுதியில் உள்ள குளம் சுமார் 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், தூர்ந்து போன நிலையில் காணப்பட்டதால், அப்பகுதியில் வசித்து வரும் 65-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அன்றாட தேவைகளுக்கான தண்ணீரைப் பெறுவதில் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

சிவன் கோயில் தெரு பகுதியில் பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு முக்கிய ஆதாரமாக இருந்து வந்த இந்த குளம், பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாமல் பராமரிப்பின்றி கிடந்தது. இதனால் குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதி முழுவதும் மண், சேறு உள்ளிட்டவை படிந்து, குளத்தின் ஆழம் குறைந்து தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

குளம் பாழடைந்த நிலையில் இருந்ததால், மழைக்காலங்களில் கூட போதிய அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியாத சூழல் நிலவியது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குளிப்பது, துணி துவைப்பது, பாத்திரங்கள் துலக்குவது உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கும், கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனால், சிவன் கோயில் தெரு பகுதி மக்கள் தங்களது பயன்பாட்டிற்கான தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமணங்குடி பகுதிக்கு சென்று, அங்குள்ள குளத்தை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்டோர் அன்றாட பயன்பாட்டிற்கான தண்ணீருக்காக நீண்ட தூரம் சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து, தங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ள குளத்தை தூர்வாரி, மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதியுடனும், வருவாய்த்துறையிடம் உரிய அனுமதி பெற்றும், சிவன் கோயில் தெரு குளத்தை தூர்வாரும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களின் உதவியுடன் குளத்தில் பல ஆண்டுகளாக தேங்கியிருந்த மண் மற்றும் சேறு அகற்றப்பட்டு, குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதி சீரமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் குளத்தின் கொள்ளளவு அதிகரித்து, எதிர்காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தூர்வாரும் பணி இன்னும் மூன்று தினங்களுக்குள் முழுமையாக நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்ததும், சந்திரநதியில் இருந்து பிரிந்து வரும் கடையடி வாய்க்கால் வழியாக குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து தேக்கி வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் குளம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, அப்பகுதி மக்களின் நீண்டகால தண்ணீர் தேவைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் இருந்த குளம் தற்போது மீண்டும் சீரமைக்கப்பட்டு வருவது, சிவன் கோயில் தெரு பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்களது நீண்டகால கோரிக்கையை ஏற்று குளத்தை தூர்வாரும் பணிக்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட துறையினருக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், குளத்திற்கு தண்ணீர் வரத்து முறையாக கிடைக்கும் வகையில் கடையடி வாய்க்காலை தொடர்ந்து பராமரித்து, குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீரை சேமித்து வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 திருக்குவளை செய்தியாளர் த கண்ணன்

Post a Comment

0 Comments