நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்குவளை வட்டம், எட்டுக்குடி ஊராட்சியில் சுமார் 50 ஆண்டுகளாக தூர்ந்து கிடக்கும் கண்டியன் ஓடையை தூர்வாரி, இருபுறக் கரைகளையும் உயர்த்தி பலப்படுத்தி, நீர்வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எட்டுக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு முக்கிய நீராதாரமாகவும், பிரதான வெள்ள வடிகால் அமைப்பாகவும் கண்டியன் ஓடை உள்ளது. சுமார் 1.5 கி.மீ. நீளமும், 60 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஓடை, முறையாகப் பராமரிக்கப்படாததால் தற்போது மண் மேடுகள், புதர்கள் மற்றும் செடிகள் மண்டி தூர்ந்து காணப்படுகிறது. பல இடங்களில் முறையான கரைகள் இல்லாததால் மழைநீர் செல்லும் பாதையும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்டா கடைமடைப் பகுதியான எட்டுக்குடி சுற்றுவட்டாரத்தில் விவசாயம் பெரும்பாலும் காவிரி ஆற்று நீர், வாய்க்கால் மற்றும் பருவமழையை நம்பியே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கண்டியன் ஓடையை முறையாகத் தூர்வாரி அதன் நீர்ப்பிடிப்புத் திறனை அதிகரித்தால், சுமார் 150 முதல் 200 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நேரடியாகப் பயன்பெறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கண்டியன் ஓடையைச் சுற்றியுள்ள சுமார் 100 ஏக்கர் நிலங்கள் போதிய நீராதாரம் இல்லாமல் பயன்பாடின்றி தரிசாக கிடப்பதாகவும், ஓடையைச் சீரமைத்து நீரைத் தேக்கி வைக்கும் வகையில் மேம்படுத்தினால், இந்த நிலங்களையும் மீண்டும் விவசாயப் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் வயல்களில் தேங்கும் அதிகப்படியான மழைநீர் விரைவாக வடிந்து கண்டியன் ஓடையில் சென்றடையும் வகையில் ஓடை சீரமைக்கப்பட்டால், பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் குறையும். இதன் மூலம் மழைக்காலத்தில் வெள்ளநீர் வடிகாலாகவும், மழைக்காலத்துக்குப் பிறகு நீரைத் தேக்கி வைக்கும் நீராதாரமாகவும் இந்த ஓடை பயன்படும்.
மேலும், ஓடையில் மழைநீர் தேங்கி நிற்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் குடிநீர்க் கிணறுகளின் நீர்வளமும் பாதுகாக்கப்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கோடைக் காலங்களில் ஏற்படும் கடும் வறட்சியை சமாளிக்கவும், கால்நடைகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்த நீர் இருப்பு உதவியாக இருக்கும்.
சுமார் 60 மீட்டர் அகலமும், 1.5 கி.மீ. நீளமும் கொண்ட கண்டியன் ஓடையை அதன் இயற்கையான அகலம் மற்றும் தேவையான ஆழத்துக்கு ஏற்ப அறிவியல் முறையில் தூர்வாரி மேம்படுத்தினால், சுமார் 7 ஏக்கர் பரப்பளவுக்கு இணையான நீர்ப்பரப்பை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை வீணாக வெளியேற விடாமல் சேமித்து, கோடைக் காலத்தில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் இதன் மூலம் ஏற்படும்.
நீர் இருப்பு அதிகரிப்பதால் பறவைகள், சிறு உயிரினங்கள் உள்ளிட்ட உள்ளூர் இயற்கைச் சூழலுக்கும் இந்த ஓடை பாதுகாப்பான வாழ்விடமாக அமையும். இதனால் விவசாயம் மட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் கண்டியன் ஓடை முக்கிய பங்காற்றும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
எட்டுக்குடி ஊராட்சிக்கான பிரதான வடிகால் பாதையாக கண்டியன் ஓடை இருப்பதால், அதன் முழு நீளத்தையும் அளவீடு செய்து, மண் மேடுகள் மற்றும் புதர்களை அகற்றி, தேவையான ஆழம் மற்றும் அகலத்தில் தூர்வார வேண்டும். மேலும், இருபுறங்களிலும் கரைகளை அமைத்து, அவற்றை உயர்த்தி பலப்படுத்துவதுடன், நீரோட்டம் தடையின்றி செல்லும் வகையில் தேவையான கட்டமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டியன் ஓடையைச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சுமார் 50 ஆண்டுகளாக எட்டுக்குடி பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக நிரந்தரத் தீர்வு கிடைக்காததால் ஓடையின் நிலை தற்போது மேலும் மோசமடைந்துள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பல ஆண்டுகளாக தூர்ந்து கிடக்கும் எட்டுக்குடி கண்டியன் ஓடையை நீர்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய திட்ட மதிப்பீடு தயாரித்து, தேவையான நிதியை ஒதுக்கி உடனடியாகத் தூர்வார வேண்டும். அதனுடன் இருபுறக் கரைகளையும் உயர்த்தி பலப்படுத்தி, மழைநீரை சேமிக்கவும், வெள்ளநீரை விரைவாக வெளியேற்றவும் ஏற்ற வகையில் ஓடையை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்



0 Comments