கீழையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மடப்புரம், மீனம்பநல்லூர், வாழக்கரை, மேலப்பிடாகை, கருங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மடப்புரம் ஊராட்சியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாகவும், பல மணி நேரம் நீடிக்கும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
மின்சாரம் தடைப்படும் நேரங்களில் பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க முயன்றாலும், உரிய பதில் கிடைப்பதில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீண்ட நேரம் மின்சாரம் இல்லாததால் வீடுகளில் அன்றாட பணிகளை மேற்கொள்வதில் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், மின்சாரத்தை நம்பி இயங்கும் பல்வேறு பணிகளும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து மடப்புரம் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி ரமேஷ் கூறியதாவது:
“எங்கள் ஊராட்சியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின்வாரியத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
மின்வெட்டு தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் நேரங்களில், பிரச்சினையை விரைந்து சரிசெய்ய போதிய பணியாளர்கள் இல்லாத நிலை உள்ளது. இதனால் பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது.
எனவே, மடப்புரம் மட்டுமின்றி கீழையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஏற்படும் தொடர் மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். போதிய மின்வாரிய பணியாளர்களை நியமித்து, மின்விநியோகம் சீராக கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மின்விநியோகத்தை சீரமைத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

0 Comments