உப்பூர் அனல் மின் நிலையப் பணிகளை முடக்கியதன் மூலம் திமுக அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை வீணடித்துள்ளதாகத் தமிழ்நாடு எரி சக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பூர் அனல் மின் நிலையப் பணிகள் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2021-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டன. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் வீணாகியுள்ள நிலையில், இன்று அப்பகுதியைத் தமிழ்நாடு எரி சக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் தெரிவித்ததாவது:
"திமுக அரசு, 'மக்கள் பணம் எப்படிப் போனாலும் பரவாயில்லை; நமக்கு வர வேண்டிய கமிஷன் வந்தால் போதும்' என்ற மனநிலையுடன் அலட்சியமாக இருந்துள்ளது. எதற்காக இந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன என்றே தெரியவில்லை. இத்தனை நாட்களாகத் துறை சார்ந்த அமைச்சர்கள் யாரும் இங்கு வந்து பார்க்கவே இல்லை.
தற்போது இந்த அனல் மின் நிலையப் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடத் தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன் பேரிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் ஆய்வுக்குப் பிறகு, பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையங்களோ அல்லது விமான நிலையங்களோ கண்டிப்பாகத் தனியார்மயமாக்கப்படாது. அவற்றைப் பராமரிக்கும் பணிகள் மட்டுமே தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றன," என்று தெரிவித்தார்.


0 Comments