ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சின்ன கீரமங்கலம் பகுதியில் ராமேஸ்வரம் செல்லும் சாலையில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பல நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால், அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சின்ன கீரமங்கலம் பகுதியில் சாக்கடை கழிவுநீர் பல மாதங்களாக தேங்கி கிடப்பதாகவும், இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதுடன், கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


0 Comments