திருப்புத்தூர் பேரூராட்சி அலுவலகத்தின் பெயர்ப் பலகையில் உள்ள எழுத்துகள் சீராக இல்லாத நிலையில், அதை சரி செய்யாமல் இருப்பது கவனத்தை ஈர்க்கிறது.
பெயர்ப் பலகை என்பது இங்கு முக்கியமான பிரச்சினை அல்ல. தாங்கள் பணியாற்றும் அலுவலகத்தின் பெயர்ப் பலகையைக்கூட முறையாக பராமரிக்க முடியாத நிலையில், திருப்புத்தூர் நகர மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அவர்களின் குறைகளை எவ்வாறு கவனித்து தீர்வு காண்பார்கள்? என்ற கேள்வியே எழுகிறது.
திருப்புத்தூர் நகரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. புதிய வீடுகள் அதிகரித்து வருகின்றன. தனிநபர்கள் தங்களது சொந்த முயற்சியில் தங்களது வாழ்க்கை முன்னேற்றத்திற்காக வீடுகளை கட்டியும், பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியும் வருகின்றனர்.ஆனால், நகரம் வளர்ந்து கொண்டிருக்கும்போது அதற்கேற்ற அடிப்படை வசதிகள் மட்டும் பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பது ஏன்?
நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மேடு பள்ளங்களுடன் காணப்படுகின்றன. தெருநாய்கள், சுற்றித்திரியும் மாடுகள் தொந்தரவு, குடிநீர் பிரச்சினை என பொதுமக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள் பல உள்ளன.
கிராமப்புறங்களில்கூட தரமான சாலைகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், திருப்புத்தூர் நகரின் பல தெருக்களில் இன்னும் தரமான சாலை வசதி இல்லாத நிலை தொடர்கிறது. திருப்புத்தூரைச் சுற்றி நான்கு வழிச்சாலை வந்துள்ள நிலையிலும், நகருக்குள் உள்ள பல சாலைகள் இவ்வாறு இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
மக்களிடம் வரி வசூலிப்பதும், வரி செலுத்த வேண்டும் என ஆட்டோ மூலம் விளம்பரம் செய்வதும் மட்டுமே பேரூராட்சி நிர்வாகத்தின் பணியா? மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிக்கு ஏற்ப அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதும் நிர்வாகத்தின் பொறுப்பு அல்லவா?
திருப்புத்தூருக்கு நகராட்சி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், தற்போது இருக்கும் பேரூராட்சிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள்கூட முழுமையாக இல்லாத நிலை இருப்பதை என்னவென்று சொல்வது?
உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், மக்கள் பிரச்சினைகள் தொடர்ந்து நீடிப்பது ஏன்?
தனிநபர்கள் தங்களது சொந்த முயற்சியில் தங்கள் வாழ்க்கையையும், நகரத்தையும் முன்னேற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரசாங்கமும் உள்ளாட்சி நிர்வாகமும் செய்ய வேண்டிய அடிப்படை பணிகள் மட்டும் பின்னோக்கிச் செல்வது ஏன்?
தங்களது அலுவலகப் பெயர்ப் பலகையைக்கூட சரி செய்யாதவர்கள்... திருப்புத்தூர் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பார்கள்?
திருப்புத்தூர் நகரின் அடிப்படை வசதிகள் குறித்து பேரூராட்சி நிர்வாகமும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

0 Comments