வேளாங்கண்ணி பெருவிழாவை முன்னிட்டு, மாவட்ட சுகாதார அலுவலரின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் வேளாங்கண்ணி கடைத்தெரு பகுதியில் புகையிலை தடுப்பு தொடர்பான சிறப்பு ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் ரகு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சி. செந்தில், மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் மருத்துவர் கே. வினோத் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் ராஜா ஆகியோர் முன்னிலையில், வேளாங்கண்ணி கடைத்தெரு பகுதியில் உள்ள கடைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது, கடைகளில் ‘NO SMOKING’ அறிவிப்பு பலகைகள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அறிவிப்பு பலகைகள் இல்லாத கடைகளின் உரிமையாளர்களுக்கு, ‘NO SMOKING’ அறிவிப்பு பலகைகளை வைப்பதன் அவசியம் குறித்தும், புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு COTPA சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டைத் தடுப்பதன் அவசியம், புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் மற்றும் பொதுமக்களை புகையிலைப் பழக்கத்திலிருந்து பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இதற்கு முன்னதாக, முந்தைய வாரம் வேளாங்கண்ணி பகுதியில் COTPA சட்டத்தின் பிரிவுகள் 6A மற்றும் 6B தொடர்பாக சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் 100 மீட்டர் சுற்றளவில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு, விதிமுறைகளை மீறிய கடைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வேளாங்கண்ணி பெருவிழாவை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, புகையிலைப் பொருள்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டைத் தடுப்பதற்கான இதுபோன்ற தொடர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

0 Comments