தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட முகாமில் லயன்ஸ் கிளப் திருச்சிராப்பள்ளி விஷன் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சுற்றுப்புற சூழலை காக்க குப்பைகளை, உருவாகும் இடத்திலேயே நான்கு வகையாகத் தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி அந்தநல்லூர் சீரா தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முதுகலை ஆசிரியர் பாலசுப்பிரமணி வரவேற்றார். பஞ்சநாதன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ருக்குமணி முன்னிலை வகித்தார். லயன்ஸ் கிளப் வட்டாரத் தலைவர் சரவணன், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன தலைவர் ஹேமலதா, இயற்கை மருத்துவர் கௌதம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன செயலரும், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான யோகா ஆசிரியர் விஜயகுமார் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகையாகத் தரம் பிரித்து வழங்குவது குறித்து பேசுகையில்,
குப்பைகள் உருவாகும் இடத்திலேயே அவற்றை முறையாகத் தரம் பிரித்து வழங்குவது சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுவதற்கும், கழிவுகளை மறுசுழற்சி செய்து பயனுள்ள வளங்களாக மாற்றுவதற்கும் அவசியமானதாகும்.
திடக்கழிவு மேலாண்மை தொடர்பான வழிகாட்டுதலின்படி, வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் உருவாகும் குப்பைகளை முக்கியமாக நான்கு வகைகளாகப் பிரித்து தனித்தனியாக வழங்க வேண்டும்.மக்கும் குப்பையில் (ஈரக் கழிவு)உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள், இலைகள், பூக்கள் போன்ற இயற்கையாக மக்கும் கழிவுகளாக மற்ற கழிவுகளுடன் கலக்காமல் தனியாகப் பிரித்து வழங்க வேண்டும் மக்காத குப்பையில் (உலர் கழிவு) பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகம் போன்ற எளிதில் மக்காத அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளாக மற்ற கழிவுகளுடன் கலக்காமல் தனியாகப் பிரித்து வழங்க வேண்டும்.அபாயகரமான கழிவுகளில்பேட்டரி, பல்ப், டியூப்லைட், பெயிண்ட் டப்பா, ரசாயனப் பொருட்கள் போன்ற மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கழிவுகளை மற்ற கழிவுகளுடன் கலக்காமல் தனியாகப் பிரித்து வழங்க வேண்டும்.
மருத்துவ / சுகாதாரக் கழிவுகளில் பயன்படுத்திய முகக்கவசம், கையுறை, சானிட்டரி நாப்கின், டயப்பர், மருத்துவப் பயன்பாட்டுப் பொருட்கள் போன்ற கழிவுகளை மற்ற கழிவுகளுடன் கலக்காமல் தனியாகப் பிரித்து வழங்க வேண்டும்.குப்பைகளை தரம் பிரிக்காமல் ஒன்றாகச் சேர்த்து வழங்குவதால் மறுசுழற்சி வாய்ப்பு குறைவதுடன், தூய்மை பணியாளர்களுக்கும் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே, “குப்பை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்போம்; தூய்மையான சுற்றுப்புறத்தை உருவாக்குவோம்” என்றார். நிறைவாக தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மேலாண்மை ஆசிரியர் திலகேஸ்வரன் நன்றி கூறினார்.

0 Comments