நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் புதுப்பள்ளி கிராமத்தில், களஞ்சியம், பரஸ்பரம், ஜீவிதம் அமைப்புகளின் முப்பெரும் விழா மற்றும் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்றது.புதுப்பள்ளி மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விவசாயிகள், பெண்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின் மூலம் அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் பங்கேற்பு குறித்து கலந்துரையாடி, தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.
கிராமப்புற மக்களின் ஒற்றுமை, விவசாயம் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் பெண்களின் பங்களிப்பை ஒருங்கிணைக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவின் சிறப்பு அம்சமாக பெண்களின் கண்கவர் கும்மி மற்றும் கோலாட்டம் நடைபெற்றது.பாரம்பரிய கலையான கும்மி மற்றும் கோலாட்டத்தை பெண்கள் உற்சாகத்துடன் ஆடிய நிலையில், இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.கீழையூர் கிழக்கு வட்டார வயலகம், கீழையூர் கிழக்கு வட்டார பரஸ்பரம், கீழையூர் நெய்தல் ஜீவிதம் மற்றும் 10 கே விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விழாவில் வட்டாரத் தலைவர் எம்.பாலகிருஷ்ணன், வட்டாரச் செயலாளர் என்.மதிவீரச்செல்வன், வட்டாரப் பொருளாளர் எம்.நாகலெட்சுமி, வட்டார ஒருங்கிணைப்பாளர் எம்.சௌம்யா, மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜானகி, புதுப்பள்ளி பகுதி தலைவர்கள் எஸ்.நாகராஜன், எம்.பி.கணேசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை எம்.கார்த்திகேசன், இளவரசி ராமமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
உறுப்பினர்களின் ஒற்றுமையையும், கிராமப்புற பாரம்பரிய கலைகளையும் ஒருசேர வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழா விழாக்கோலத்துடன் நிறைவடைந்தது.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்






0 Comments