கமுதியில் மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி



 ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், மீனவ இளைஞர்களை முப்படைகள் மற்றும் பல்வேறு பாதுகாப்புப் பணிகளில்சேர்வதற்கு தயார்படுத்தும் வகையில் 5-வது ஆண்டு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு காவல்துறையின் கடலோர பாதுகாப்புக் குழுமம் சார்பில், காவல்துறையுடன் இணைந்து டெல்டா ஸ்குவாட் பவுண்டேஷன் லெப்டினன்ட் ஈசன் தலைமையில் இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ராணுவம், கப்பற்படை, கடலோர காவல் படை உள்ளிட்ட பாதுகாப்புப் பணிகளுக்குத் தேவையான உடல் தகுதி, ஒழுக்கம் மற்றும் திறன்களை வளர்க்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேசன், காவல் ஆய்வாளர் சதீஷ்குமார், கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளர் ஜான்சிராணி, சார்பு ஆய்வாளர் கண்ணன் மற்றும் காவலர்கள் மதியழகன், ராமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டெல்டா ஸ்குவாட் பவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியில் இதுவரை 3 பேட்ச்கள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன. கமுதியில் பயிற்சி பெற்ற 12 இளைஞர்கள் முப்படைகளின் சிப்பாய் பிரிவிலும், 4 பயிற்சியாளர்கள் முப்படைகளின் அதிகாரிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மீனவ இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பாதுகாப்புப் பணிகளுக்கான திறன்களை வளர்த்து, அவர்களை முப்படைகளில் பணியாற்றும் வகையில் உருவாக்குவதில் இப்பயிற்சி முக்கிய பங்கு வகித்து வருவதாக பயிற்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments