தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கப் பணியாளர்களுக்குக் காலமுறை ஊதியம், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் 7 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஆயர் சுந்தரம் திருமண மண்டபத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் எஸ். இளஞ்சேரன் வரவேற்றார். தொடக்கமாகக் குத்துவிளக்கேற்றப்பட்டு, கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, மறைந்த பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாட்டு அறிக்கையை ஆர். தீபா, டி. ரேகா மற்றும் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். மணிவண்ணன் ஆகியோர் வாசித்தனர். பொருளாளர் பி. செல்வசுந்தரி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன், மாநிலச் செயலாளர் ஆர். லெனின் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னாள் கீழ்வேளூர் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி, கீழ்வேளூர் சட்டப்பேரவை உறுப்பினர் டி. லதா, புதுவாழ்வுத் திட்ட மாநிலத் தலைவர் ஆர். தமிழரசு, சிஐடியு நாகை மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ராஜேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
இக்கூட்டத்தில், ஊரக வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்,பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்,உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்,மகளிர் திட்டத்தைத் தனித்துறையாக அறிவிக்க வேண்டும்,அனைவருக்கும் அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும்,கணக்காளர்கள் மற்றும் சிஎஸ்டி பணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் பி. ஜெகதீஸ்வரி கூறியதாவது:
எங்கள் சங்கத்தை சிஐடியு தொழிற்சங்கத்துடன் இணைத்து, சிஐடியு நிர்வாகிகளையும் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் இடம்பெறச் செய்து, இனிவரும் காலங்களில் இணைந்து செயல்படுவது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பணியிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஊழியர்களுக்குத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பணி நிரந்தரம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு அளிப்பதுடன், உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பணியிலிருந்து நீக்கப்பட்ட மூன்று ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, வரும் அக்டோபர் 26-ஆம் தேதி மாநில அளவிலான போராட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.கூட்டத்தின் நிறைவில் நாகை மாவட்ட சங்கத் தலைவர் எம்.கே. தங்கமணி நன்றி கூறினார்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்



0 Comments