பெரம்பலூர்: தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

 


பெரம்பலூர்: தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  மாணவ, மாணவிகளுக்கு 12.10.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ரோவர் கல்விக் குழுமத்தின் மேலாண்மைத் தலைவர் முனைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜான் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.

கல்லூரி முதல்வர் முனைவர் இறைவன் அருட்கனி அய்யநாதன் சிறப்புரையாற்றினார். அப்போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவம், அதன் பயன்பாடுகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்கு இச்சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கினார்.

மேலும், அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுச் சேவைகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதில் இச்சட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று எடுத்துரைத்தார். குறிப்பாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றும், மாணவர்கள் தாங்கள் அறிந்த தகவல்களைத் தங்களது கிராமங்கள் மற்றும் சமூகத்தினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகளிடையே தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளை கல்லூரியின் தோட்டக்கலைத் துறை உதவிப் பேராசிரியர் திரு. வினோத் மணி நடத்தினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் இறுதியில், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. ராமதாஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அலுவலர் ஜெயசீலன் மற்றும் அலுவலக மேலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் செய்திருந்தனர்.










Post a Comment

0 Comments