கும்பகோணத்தில் மாசிமக விழாவையொட்டி சிவன் கோவில்களில் கொடியேற்றம்
கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது.கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசிமக திருவிழா நேற்று ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோவில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மாசிமக பெருவிழாவை முன்னிட்டு சிவன் கோவில்களின் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு, ராஜகோபுரங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. நேற்று அதிகாலை கோவில்களில் நடை திறக்கப்பட்டு அனைத்து சாமி - அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்தி சாமிகள், உற்சவ மூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடி மரத்தின் முன்புஎழுந்தருளினர். அப்போது சிவாச்சாரியார்கள் வேதபாராயணம், திருமுறைகள், சிறப்பு நாதஸ்வரம் முழங்க கொடிமரத்திற்கு மஞ்சள், திரவியப்பொடி, சந்தனம் பால் உள்ளிட்ட அபிஷேகமும் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் நந்திபகவான் உருவம் வரைந்த மாசிமக விழா கொடியேற்றப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி மற்றும் அம்பாளை வழிபட்டனர்.குறிப்பாக மகாமகப் பெருவிழாவின் முதன்மையான ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோவில் நேற்று காலை கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதிகும்பேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை அம்பாளை வழிபட்டனர்.இரவு ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர்கள் கிருஷ்ணகுமார், கணேஷ்குமார், சிவசங்கரி மற்றும் உபயதாரர்கள்,கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
No comments