அறந்தாங்கி அருகே பாஜக முக்கிய நிர்வாகி வேலூர் இப்ராஹிம் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் இன்று  போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில் இன்று நடைபெற்ற பாஜக ஒன்றிய செயற்குழுக் கூட்டத்தில் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்துகொண்டார். பின்னர், அங்கிருந்து கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த சிறுபான்மை பிரிவு மாவட்ட பொதுச் செயலாளர் அம்ஜத்தை சந்திப்பதற்காக புறப்பட்டுச் சென்றார். இவரது வருகைக்கு கோட்டைப்பட்டினம் ஜமா அத் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைக் காரணம் காட்டி கோட்டைப்பட்டினம் செல்வதை தவிர்க்குமாறு இப்ராஹிமிடம் போலீஸார் தெரிவித்தனர். அதையும் மீறி அவர் கோட்டைப்பட்டினம் செல்வதாக தெரிவித்தார். அவரோடு, மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் கவிதா, பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் முரளிதரன், ஒன்றியத் தலைவர் சக்திவேல் உள்ளிட்டோரும் அங்கு செல்ல வேண்டும் என போலீஸாரிடம் கூறினர்.இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக கைது செய்வதாக கூறி இப்ராஹிம்மை போலீஸார் கைது செய்து, நாகுடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.திமுக எதிர்க் கட்சியாக இருக்கும்போது ஜனநாயகத்தின் குரல் வலையை நெரிக்கக் கூடாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அதே தவறை செய்து, பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கிறார் என்று கூறினார்.

முன்னதாக அறந்தாங்கியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பது, பள்ளிகளுக்கு கட்டிடம் இல்லாதது, விவசாயிகளுக்கு நிவாரணம் கூட கொடுக்க முடியாத நிலையில் பேனாவுக்கு சிலை வைக்கும் திட்டம் தேவையற்றது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. முதலில் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் எதார்த்தமானது. பாஜக ஆட்சியின் வளர்ச்சியைப் பற்றிக் குறைகூற முடியாத நிலையில், அதானி விவகாரத்தை காங்கிரஸ், திமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தேர்தலில் தேசிய சிந்தனையாளர்கள் அனைவரும் அதிமுக வெற்றி பெற உழைக்கிறார்கள். ஆனால், இன்னொரு பக்கம் பணத்தையும், மதுவையம் கொடுத்து வாக்குகளை வாங்குவதற்காக அமைச்சர்கள் வாடகைக்கு வீடு பிடித்துக்கொண்டு தங்கி உள்ளார்கள்.சிறுபான்மையின மக்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கான மத்திய அரசு நிதி குறைப்புக்கு காரணம் திமுக அரசுதான் என்றார்.

Post a Comment

0 Comments