விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவிற்கு 20 நவீன தாய் சேய் படுக்கைகள் கொள்முதல் செய்ய உத்தரவிட்ட ஆட்சியர் ஜெயசீலன், அதில் பத்து படுக்கைகளுக்கான தொகையை மாவட்ட ஆட்சியரின் பொது நிதியிலிருந்து வழங்குவதாக தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.6.89 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிறப்பு பிரிவு கட்டிடப் பணி, ரத்த வங்கி அமைக்கும் பணி, மகப்பேறு சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ரத்த சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவற்றில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு, சிகிச்சைக்கு வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நோயாளிகளின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக வசதிகளை மேம்படுத்த சுகாதார துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் மகப்பேறு பிரிவில் அறுவை சிகிச்சைக்கு பின் தாய்மார்களின் வசதிக்காக மாற்றம் செய்யக்கூடிய வகியிலான ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 20 நவீன தாய் சேய் படுக்கைகளை கொள்முதல் செய்ய உத்தரவிட்டார். அதில் 10 படுக்கைகளுக்கு தேவையான நிதி மாவட்ட ஆட்சியரின் பொது நிதியில் இருந்து வழங்குவதாக தெரிவித்தார். 130 படுக்கைகள் கொண்ட ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நான்கு மட்டுமே மாற்றக்கூடிய நவீன படுக்கைகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments