ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தாளவாடி அருகே உள்ள அருள்வாடி மற்றும் மல்லன்குழி பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக விவசாய தோட்டங்களில் முகாமிட்டபடி சுற்றித் திரிகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே நேற்று அருள்வாடி பகுதியில் உள்ள விவசாய விளை நிலத்தில் பட்டப்பகலில் நான்கு காட்டு யானைகள் அங்குமிங்கும் நடமாடியபடி உலாவின. காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சமடைந்தனர். இது குறித்து ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் பட்டப்பகலில் விவசாய விளை நிலங்களில் நடமாடும் காட்டு யானைகளை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் நேரம் இணையதளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

0 Comments