மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரங்கநாதர் கோயில் மாசிமகத் தேர்திருவிழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரங்கநாதர் திருக்கோயில் சுமார் 1200 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோயிலாகவும், தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகத் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கிருஷ்ணதேவராய மன்னரின் ஆட்சி காலத்தில் கொங்கு நாட்டை நிர்வகித்து வந்த திருமலை நாயக்கர் இக்கோயிலுக்கு புதிய தேரை வழங்கி ஆண்டுதோறும் மாசி மகம் பௌர்ணமி தினத்தன்று தேரோட்டத்தை நடத்தி பெருவிழாவாக கொண்டாடப்படுவதை துவக்கி வைத்துள்ளார். இதன்படி இவ்வாண்டு மாசிமகத் தேர்த்திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் அரங்கநாதர் திருக்கல்யாணம் அன்னப்பட்சி வாகனம், சிம்ம வாகனம் என ரங்கநாதர் எழுந்தருளல் என ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலின் முன்புறம் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட திருத்தேரில் அரங்கநாதர், ஸ்ரீதே பூதேவியுடன் எழுந்தருள மாலை 4.30 மணியளவில் தேரரோட்டம் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் வடம் பிடித்திழுக்க கோயிலின் நான்கு மாட வீதிகள் வழியாக திருத்தேர் பவனி நடைபெற்றது. தேரை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பரஞ்ஜோதி, கோயில் செயல் அலுவலர் லோகநாதன், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ ஒ.கே.சின்னராஜ், கோவை மாவட்ட அறங்காவலர் நியமன குழு உறுப்பினர் கவிதா கல்யாணசுந்தரம், காரமடை நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ், கோவை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சங்கீதா, துணைத் தலைவர் விக்னேஷ், கோவை வடக்கு மாவட்ட அவைத் தலைவர் புருஷோத்தம்மன், திமுக காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ், காரமடை நகராட்சி ஆணையாளர் பால்ராஜ், காரமடை தாசப்ப பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என பல மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். காரமடையில் நடைபெற்ற திருத்தேரோட்ட நிகழ்ச்சியினை முன்னிட்டு கோவை - மேட்டுப்பாளையம் இடையேயான சாலை மார்க்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் விழாக்கால சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியினை முன்னிட்டு காரமடை பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இதனினை தொடர்ந்து செவ்வாய்கிழமை இரவு 10.30 மணிக்கு பரிவேட்டையுடன், குதிரை வாகன உற்சவமும் நடைபெறுகிறது. புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு தெப்பத்திருவிழா, சேஷவாகன உற்சவமும், வியாழக்கிழமை மாலை சந்தான சேவை நடக்கிறது. மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

0 Comments