பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி கோயில் வளாகம் சுத்தம் செய்யும் பணி


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த ஆண்டு குண்டம் திருவிழா  மார்ச் 20 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது.  பூச்சாட்டுதலை தொடர்ந்து 21 ஆம் தேதி இரவு  அம்மன் சப்பரம் பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து திருவீதி உலாவாக புறப்பட்டு சிக்கரசம்பாளையம் கிராமத்தைச் சென்றடைகிறது. 22 ஆம் தேதி புதன்கிழமை  சிக்கரசம்பாளையம் கிராமம் முழுவதும் அம்மன் சப்பரம் திருவீதி உலா நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து  23 ஆம் தேதி இக்கரை நெகமம் புதூர்,  வெள்ளியம்பாளையம், தயிர்பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை, பழைய கொத்தமங்கலம், பகுடுதுறை, முடுக்கன்துறை வழியாக தொட்டம்பாளையத்தை சென்றடைகிறது. 24 ஆம் தேதி தொட்டம்பாளையம், வெள்ளியம்பாளையம் புதூர், இக்கரைதத்தப்பள்ளி, அக்கரை தத்தப்பள்ளி கிராமங்களில் திருவீதி உலா நடைபெறுகிறது. 25 ஆம் தேதி உத்தண்டியூர், அய்யன் சாலை, பகுத்தம்பாளையம், தாண்டாம்பாளையம், கெஞ்சனூர் ஹவுசிங் யூனிட் வழியாக சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலை அம்மன் சப்பரம் சென்றடைகிறது. 26, மற்றும் 27 ம் தேதிகளில் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை, ரங்கசமுத்திரம், உள்ளிட்ட சத்தியமங்கலம் நகர்ப்பகுதி முழுவதும் திருவீதி உலா நடைபெறுகிறது. 28 ஆம் தேதி கோட்டுவீராம்பாளையம், கோம்புபள்ளம், பட்டவர்த்தி அய்யம்பாளையம் புதுவடவள்ளி, புதுக்குய்யனூர், பசுவபாளையம், புதுப்பீர்கடவு, ராஜன்நகர்  ஆகிய கிராமங்களில் திருவீதி உலா முடிந்து அன்று இரவு அம்மன் சப்பரம் பண்ணாரி அம்மன் கோவிலை சென்றடைகிறது.  28 ஆம் தேதி இரவு கோவிலில் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  ஏப்ரல்   4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மாவிளக்கு எடுத்தல், புஷ்பரத ஊர்வலம், திருவிளக்கு பூஜை,  உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.  ஏப்ரல் 10 ஆம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.  இந்நிலையில் தற்போது குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. 30க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், டிராக்டர்கள் பயன்படுத்தி கோவில் வளாகத்தை சுற்றிலும், ராஜன்நகர் மற்றும் புதுக்குய்யனூர் பிரிவு பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடம் பகுதியிலும் இடத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments