காவல்துறையினர் நடத்திய மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அலப்பறையில் ஈடுபட்ட மதுப் பிரியர்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரின் உத்தரவின் பேரில் கள்ளச்சாராயம் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் கஞ்சா புகைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஆண்டு தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் திருவாரூர் கலைஞர் நகரப் பேருந்து நிலையத்தில் ஆரூர் கலைக்கூடம் கலைக்குழுவினர் நடத்திய போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பொது மக்களுக்கு மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பாடல், இசை மற்றும் நாடகத்தின் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக இதில் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தினரை வரவேற்கும் விதமாக வணக்கம் பாடல் மற்றும் நாட்டுப்புற பாடல்களை கலைக்குழுவினர் பாடினர்.அப்போது திடீரென்று கூட்டத்திலிருந்து வந்த மதுப் பிரியர் ஒருவர் குத்தாட்டம் போட தொடங்கினார். அங்கு  இருந்த பெண் காவலர்கள் அவரை எச்சரித்து அனுப்பிய போதும் கூட்டத்திலிருந்து செய்கை செய்தவாறு அலப்பறையில் தொடர்ந்து ஈடுபட்டார்.பாடல் இசைக்கப்படும் அவ்வப்போது மீண்டும் வந்து ஆட்டம் போடத் தொடங்கினார்.

மதுவுக்கு எதிராக நடைபெறுகின்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மதுப்பிரியர் ஒருவர் குத்தாட்டம் போட்டது சுற்றி இருந்தவர்களை நகைப்புக்கு உள்ளாக்கியதுடன் நிகழ்ச்சியை பார்த்த பெண்களை முகம் சுளிக்க வைத்து.தொடர்ந்து காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றது.இதனை பேருந்து நிலையத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கண்டு ரசித்தனர்.இந்த நிகழ்ச்சியில் மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments