தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் பவானிசாகரில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் விதை உற்பத்தியினை இயந்திரமயமாக்குதல் பற்றிய வயல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல் வரவேற்றார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விதை மையத்தின் இயக்குனர் உமாராணி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை தாங்கி வயல் விழாவில் நெல் விதை உற்பத்தியினை இயந்திரமயமாக்குதல் பற்றி விவசாயிகளிடையே கலந்துரையாடினார். மேலும் புதிதாக பயன்பாட்டிற்கு வந்துள்ள இயந்திரங்களை பயன்படுத்தி நெல் விதை உற்பத்தி பரப்பளவை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட மண்ணியல் ஆய்வகத்தை திறந்து வைத்தார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி நிலையம் ஒன்றிற்கு ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்ற அடிப்படையில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தால் ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் செய்து கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் துணைவேந்தர் கீதாலட்சுமி முன்னிலையில் கையொப்பம் இடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் அரக்கன் கோட்டை கிராமத்தில் பசுந்தாள் மற்றும் திருந்திய நெல் சாகுபடி பயனாளிகளுக்கு துணைவேந்தர் கீதாலட்சுமி தெளிப்பான் கருவிகளை வழங்கினார். வரதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சம்பங்கி சாகுபடி பயனாளிகள் தங்களின் சாகுபடி தொழில்நுட்ப அனுபவத்தை துணைவேந்தருடன் பகிர்ந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் வரப்பு வெட்டி பூசும் இயந்திரம், நடவு இயந்திரம், அறுவடை இயந்திரம், வைக்கோல் கட்டும் இயந்திரம் ஆகியவற்றின் செயல் விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி, செயற்பொறியாளர் விஸ்வநாதன், வேளாண் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் ரேணுகாதேவி நன்றி கூறினார்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

0 Comments