விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து எம்பிகே புதுப்பட்டி விலக்கை தாண்டி சென்று கொண்டிருந்த போது, ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் சங்கரன் கோயில் அருகே உள்ள மணலூரை சேர்ந்த 32 வயதுடைய புலியூரான் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த இவரது மனைவி தீபிகா மற்றும் பேருந்து ஓட்டுனர் தென்காசியை சேர்ந்த முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். முதலுதவிக்கு பிறகு தீபிகா பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
காரில் வந்த புலியூரான் மகள் 4 வயதுடைய புவன்யாஶ்ரீ மற்றும் பேருந்தில் பயணம் செய்த 33 பயணிகள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். குழந்தை பரிசோதனைக்காக அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் புலியூரான், தனது குழந்தைக்கு கோயிலில் மொட்டை போடுவதற்காக மனைவி, மகளுடன் சொந்த ஊருக்கு வந்த போது இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
இந்த விபத்தில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சத்திரப்பட்டியை சேர்ந்த சுமைப்பணியாளர் பாண்டி என்பவரது இரு சக்கர வாகனத்தை பேருந்து இடித்தது. இதனால் இரு சக்கர வாகனம் சேதமானது.
தகவல் அறிந்து வந்த வன்னியம்பட்டி காவல் துறையினர் பேருந்துக்குள் இருந்த பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments