சத்தியமங்கலம் அருகே பைக்கில் சென்ற திமுக பிரமுகர் உட்பட இருவர் காட்டு யானை தாக்கி பலி

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதி சாலை வழியாக வாகனங்களில் செல்வோரை காட்டு யானைகள் தாக்கும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி குன்றி மலை கிராமத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி பொம்மே கவுடர்(60) தனது பைக்கில் குன்றியிலிருந்து மாக்கம்பாளையம் செல்வதற்காக  வனப்பகுதியில் உள்ள கரடு முரடான மண் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில்  சாலையோரம் நின்ற காட்டு யானை அவ்வழியே சென்ற பொம்மே கவுடரை கண்டதும் ஆக்ரோஷத்தில் அதிவேகமாக துரத்தியது. இதில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பொம்மே கவுடர் தப்பியோட முயற்சித்த போது காட்டு யானை தனது தும்பிக்கையால் தாக்கி மிதித்தது. மேலும் அப்போது வழியே இன்னொரு பைக்கில் ஒரு வாலிபருடன் வந்த குன்றி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சித்து மாரி(57) என்பவர் பொம்மே கவுடரை யானை தாக்குவதை கண்டு அச்சமடைந்தார். இந்நிலையில் காட்டு யானை திடீரென மற்றொரு பைக்கில் வந்த வாலிபரையும், சித்துமாரியையும் துரத்தியது. இதில் வாலிபர் தப்பிய நிலையில் காட்டு யானை சித்துமாரியை தும்பிக்கையால் தாக்கி மிதித்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இது குறித்த தகவல் அறிந்த கடம்பூர் வனத்துறையினர் மற்றும் கடம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்ளயானை தாக்கி உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும்,  முதற்கட்ட நிவாரணத் தொகை  ரூ.50 ஆயிரம்  வழங்கப்படும் என தெரிவித்தனர். இச்சம்பவம் கடம்பூர் மலைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments