பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக திருவாரூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.இதில் 200க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்தல் ஊதிய முரண்பாட்டை களைதல் காலிப்பணியிடங்களை நிரப்புதல் காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.

மேலும் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை சரண்டர் உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு  காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சத்துணவு ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் எம்ஆர்பி செவிலியர்கள் வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் நூலகர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.சாலை பணியாளர்களின் 41 மாதம் பணிநீக்க காலத்தினை வரைமுறைப்படுத்த வேண்டும். ஏழாவது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

மேலும் இது குறித்து ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் வருகின்ற இருபதாம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற மார்ச் 24 ஆம் தேதி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments