நாகையில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் வீட்டின் பொருட்களை உடைத்து சூறையாடி பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டதாக இராணுவ வீரரின் மனைவி புகார் ; பாஜகவினர் தகாத வார்த்தையில் பேசி அச்சுறுத்தியதாக முன்னாள் ராணுவ வீரரின் மனைவி கண்ணீர் வாக்குமூலம் அளித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ; பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு.
நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்துள்ள தேவங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் பாலமுருகன். இவர் தனது மனைவி ஜெயஸ்ரீ மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி பாலமுருகன் தனது காரில் திட்டச்சேரி சாலையில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பாலமுருகன் காரை மறித்து வீண் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில் முன்னாள் ராணுவ வீரர் பாலமுருகன் மற்றும் இளைஞர்கள் ஒருவருக்கொருவர் தாக்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனத்தையும் நான்கு சக்கர வாகனமும் சேதம் அடைந்துள்ளது. அதனை தொடர்ந்து கொந்தை பகுதியை சேர்ந்த ராம்நாத் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் இராணுவ வீரர் பாலமுருகனை திட்டச்சேரி போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து கணவர் சிறை சென்ற நிலையில் ராம்நாத் -க்கு ஆதரவாக பாஜக திருமருகல் முன்னாள் ஒன்றிய பொதுச்செயலாளர் , தற்போதைய பாஜக பிரமுகர் கொந்தை பாலு தலைமையிலான பாஜகவினர் தனது வீட்டில் பொருட்களை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக முன்னாள் ராணுவ வீரரின் மனைவி ஜெயஸ்ரீ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி அச்சுறுத்தல் செய்ததாகவும், பணம் கேட்டு மிரட்டியதாகவும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து திட்டச்சேரி போலீசார் பாஜக பிரமுகர் கொந்தை பாலு மீது வழக்குப்பதிவு செய்து அந்த கும்பலை தேடி வருகின்றனர். நாகையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரனின் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் செயல் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



0 Comments