திருவாரூர் மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றும் லாரிகளுக்கான வாடகை பிரச்சினை காரணமாக லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் போது, அந்த நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளுக்கும், ரயில் நிலையங்களில் வரும் சரக்கு ரயில்களில் நெல் மூட்டைகளை ஏற்றி சென்று இறக்கும் பணியிலும் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக திருவாரூர் மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான வாடகை ஒப்பந்ததாரர்கள் மூலமாக லாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஒப்பந்தமானது பிப்ரவரி 28ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமே லாரிகளுக்கான வாடகையை வழங்க தொடங்கியுள்ளது. இந்த வாடகையானது ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வாடகையை விட ஒரு லாரிக்கு 360 ரூபாய் வரை குறைவான வாடகையை நிர்ணயித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாடகை தங்களுக்கு கட்டுப்படியாகாது எனக்கூறி திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நிரம்பி வழிகின்றன. சேமிப்புக் கிடங்குகளுக்கும், சரக்கு ரயில்களுக்கும் நெல் மூட்டைகளை ஏற்றி செல்லும் பணி தடைபட்டுள்ளது இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments